தாது வர்க்கம் - 3

                      சித்த மருத்துவத்தின் கண்கள் மூன்று
தாது வர்க்கம் – 1
முதல் தொகுதியில் நாம்சுத்தி முறைகள் பார்த்தோம் இனி குணம் நிகண்டு இவ்விரண்டு பற்றிப் பார்ப்போம். மருந்து பொருள்களை தாது — தாவர – சீவ என்று மூன்று வகையாக பிரிக்கலாம். இதில் முதலில் தாது வர்க்க மருந்து களை பற்றி பார்ப்போம். இதில் உலோகங்கள், காரசாரம், பாடனம், உபரசம் என வகைப் படுத்தி உள்ளனர்.
உலோகம் : -- இது இயற்கையில் உண்டான  உலோகங்கள் பூமியில்  இருந்து கிடைக்கும் உலோகம். அடுத்து  செயற்கையாக இரண்டு அல்லது மூன்று உலோகங்களை இணைத்து உண்டாக்கப் பட்டது இதில் சித்த மருத்துவம் பயன் படுத்தும் உலோகங்கள் அவர்கள் காலத்தில் தெரிந்த அல்லது உபயோகத்தில் இருந்த உலோகங்கள் மட்டுமே பயன் பட்டன அவை பதினொன்று ஆகும்.
தங்கம் – வெள்ளி – செம்பு – நாகம் - உருக்கு – வெண்கலம் – தரா -கருவங்கம் – வெள்வங்கம் – இரும்பு – பித்தளை– என 11  மட்டுமே பயன் படுகிறது. இதில் வெண்கலம், பித்தளை, தரா எனப்படும் மூன்றும் இரண்டு மூன்று உலோகங்களை இணைத்து உண்டாக்கப்படும் உலோகமாகும். மற்றவை இயற்கை உலோகங்கள் ஆகும்.










தங்கம் இது மனிதன் நீண்ட காலமாக அறிந்த உலோக மாகும். இதுவே இன்றைய ஆங்கில, சித்த, ஆயுர்வேத என்ற பலமருத்துவங்கள் வளர்ச்சி அடைய காரணமாக இருந்தது என்றால் மிகையாகாது. மனிதனின் தங்கம் செய்யும் ஆசையே புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊன்று கோலாக இருந்தது. இரசவாதம் என்று கிரேக்க, இந்தியா என்று பல நாடுகளில் ஆய்வு முறைகள் இரசாயன மற்றும் உயிரியல் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு பெற்றது. இதில் இந்தியாவில் புத்தரின் வழியில் வந்தவரான கி.பி. 150 ல் வாழ்ந்தவரான நாகர்ச்சுனர் இந்தியாவில் இரசவாத கருத்துக்களை வெளிப்படுத்தினார் இவர் சித்த மருத்துவ நூலில் திரு மூலரின் சீடராக கூறப்பட்டுள்ளது. சித்தர்களில் சிலரும் சித்த மருத்துவ நூல்களில் வகாரம் பற்றி இருவேறு கருத்துக்களை கூறியுள்ளனர். இன்றும் பலர் இந்த கருத்துக்களின் அடிப்படையில் தங்கம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர். தங்கத்தின் தனிம மூலக எண் 79 இது மருத்துவத்தில் கீழ்கண்டவாறு பயன் படுகிறது.
அடற் தாவர விடங்கள் ஒளி மங்கள்
கடத்தாமுத் தோடம் சயங்காச – முடற்றாபஞ்
சோகையிருந் தாது நட்டம் திட்டிநோ ஈளைஇவை
யீகையிருந் தாலேகு மென்.
ஈகை – தங்கம் – இதன் குணம் தாவர விசங்கள், உடல் நிறம் குன்றல், அபின்யாச சந்நிபாதம், பித்த சயம், தேக வெப்பு, முதிர்ந்த கப நோய், சுக்கிலம் குறைதல், கண் நோய், கபங்கட்டுதல் போன்ற நோய்க் குறிகளுக்கு நல்ல மருந்தாக பயன் படும்
பொது குணம் – உடல் வலிமை உண்டாக்கி – TONIC ,  காம உணர்வு தூண்டி – APHRODICSIAC ,  









வெள்ளி :--
தங்கத்திற்கு அடுத்து மதிப்பு மிக்க உலோகம் இதுவும் மனிதன் நீண்ட காலமாக அறிந்த உலோகங்களில் ஒன்று. தங்கம் – வெள்ளி – தாமிரம் இவை கி.மூ நாலாயிரத்தைச் சேர்ந்த பாபிலோநியவிலும், எகிப்திலும் காணப்படும் புராதன சின்னங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளியின் தனிம மூலக எண் 47 இதுவும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது. இதனுடன் வெடியுப்பு திராவகம் எனப்படும் நைட்ரிக் ஆசிட் கலந்து உஷ்ணப் படுத்தும் போது வெள்ளிக் காடிகாரம் (சில்வர்நைட்ரேட்)என்னும் உப்பு கிடைக்கிறது. இதுவும் மருத்துவத்திற்கு பயன் படுகிறது.
பாய்க்கூட்டங் காட்டாப் பழைய சுரந் தாருவிடம்
வாய்க்கூட்டச் செய்மேக வாதமுத – நோய்க்கூட்ட
மண்டாது காணிகொளு மத்திமே கச்கசிவும்
வெண்டாது காணிமெய்யை மேல்
                                :-- தேரையர்
இரத்தங் சயம்பித்த யீளை கண்நோய் காச
முரத்தையம் அட்டகுன்ம மூதை – வருத்தும்
விரனஞ்சி லேட்டுமநோய் மெய்ப்புளிப்பு ண்நூரன்
மரணமுறும் வெள்ளியினால் வாழ்த்து
                                :-- தேரையர்
நீண்ட நாள் சுரம், பலம் மிக்க விசங்கள், மேக வாதப் பிடிப்பு, வெள்ளை ஒழுக்கு குணமாகும. இரத்த பேதி, சயம், பைத்தியம், கோழை, விழிநோய், இருமல், மார்புசளி, எட்டுவிதக் குன்மநோய், வாத கோபம், கிரந்தி, நீர்க்கோர்வை,சிரங்கு, சொறி தீரும்
பொது குணம் –உடல் வலிமை உண்டாக்கி, முக்குற்ற சமனாக்கி, உடல் இசிவு அகற்றி
தாமிரம் :--
இதுவும் மனிதன் நீண்டகாலமாக பயன் படுத்தி வரும் உலோகமாகும். மனித வாழ்வியலில் சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்த உலோகங்களும் கண்டு பிடிக்கப்படவில்லை. அதன் பின்னும் மனிதன் உலோகங்களைக் கண்டு கொண்ட நிகழ்வுகளும் எதிர்பாராமல் ஏற்பட்டவையே. இரசாயன செயல்களில் ஒன்றை ஒன்று ஒத்து இருக்கும் உலோகங்களில் தங்கம், வெள்ளி, தாம்பிரம் மூன்று உள்ளன. இதன் தனிம மூலக எண் 29  இம் மூன்று உலோகங்களிலும் தாமிரத்தை விட வெள்ளி அதிக நிலைத் தன்மை மிக்கது, எனவே அது தன்னிலையில் அகப்படும், ஆயினும் தாமிரத்தை விட குறைவாகவே கிடைக்கிறது. தங்கத்தின் நிலைத்தன்மை இவை இரண்டைக் காட்டிலும் அதிகம் இம் மூன்று உலோகங்களிலும் கிடைத்தற்கு அரியது தங்கமாக உள்ளது. கிரேக்கர்கள், ரோமர்கள் ஆகியோரின் காலத்தில் தாமிரச் சுரங்கங்கள் இருந்தன. மத்தியதரைத் தீவுகளில் ஒன்றான சைப்ரஸ் Cyprusஎன்னும் பெயரில் இருந்து காப்பர் copperஎன்னும் பெயர் வந்தது. தாம்பிரத்துடன் துத்தநாகத்தை கலந்து பித்தளை என்ற உலோகம் உண்டாக்கப் படுகிறது. இது போல் தாமிரத்துடன் வெள்ளீயத்தை கலந்து வெண்கலம் செய்யப் படுகிறது. இவை எல்லாமுமே தங்கம் போன்ற உயர்ந்த உலோகத்தைக் உண்டாக்கவேண்டும் என்ற மனிதனின் செயலே காரணமாகும். இது சித்த மருத்துவத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
தாம்பரத்தாற் சோரிபித்தஞ் சந்நிவழுவைகபம்
வீம்பார் பிலீகமந்தம் வெண்மேகம் – தேம்பழலை
சூதகநோய் புன்கிரந்தி தோடசுவாசம் கிருமி
தாதுநட்டம் கண்ணோய் போஞ்சாற்று
                                :-- தேரையர்
இதனால் இரத்த பித்தம், சந்நிபாதம், வழுவைமகோதரம், கபாதிக்கம், பீலிகம், அஜீரணம், வெண்குட்டம், பித்தகபம், ரத்தகுன்மம், விரணம், திரிதோட காசம், கிருமி, தாது நட்டம், கண்ணோய் இவைகள் தீரும். இதை மருந்து செய்யும் போது மிக கவனமாக அதன் சுத்தி செய்து அதன் களிம்புத் தன்மையை நீக்கி பயன் படுத்த வேண்டும்.
பொதுகுணம் – சிறிய அளவில் துவர்ப்பி Astringent தாது வெப்பகற்றி Sedative  இசிவகற்றி Anti-spasmodic
அதிகஅளவில் – உடல் தேற்றி Alterative அழுகலகற்றி Anti-septic வாந்தி உண்டாக்கி Emetic










நாகம் :--
இதுவும் சித்த மருத்துவத்தில் பயன்படும் உலோகங்களில் ஒன்றாகும். இதன் தனிம மூலக எண் 30 இதுவும் மனிதன் நீடக்கலாமாக அறிந்த ஒன்று தான். துத்த நாகம் சேர்ந்த உலோக கலவைகள் கிமு ஆயிரத்து ஐந்நூறை சேர்ந்ததாக கருதப்படுகிறது. பித்தளை செய்ய இது கலக்க வேண்டியுள்ளது. ஆனால் வியாபார ரீதியாகவும் பிரித்து எடுக்கும் முறை 1746 ல் ஆண்டிரியாஸ் சிக்ச்மன்ட் மார்கிராப் என்ற ஜெர்மானிய விஞ்ஞானியால் கண்டு பிடிக்கப்பட்டது. இது தமிழில் துத்த நாகம் zinc என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது.
மேகம் கிளர்பேதி வெட்டையழலை தணிக்கும்
வேகங்கி ராணி விளக்குங்கான் – போகப்
பரியமுளைப் புண்ணைப் பயித்தியத்தைப் போக்கும்
அரியதுத்த நாகமது.
                           :-- தேரையர்
இதனால் மேகத்தினால் ( பெண் உறவினால் உண்டாகும் நோய் ) புண், அதிசாரம், வெள்ளை, உட்ச்சூடு, சீதரத்தக் கழிச்சல், மூல முளை விரணம், பித்தம் இவைகளை நீக்கும். தற்காலம் இது சக்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் இன்சுலின் எனப்படும் ஹார்மோன் மருந்தின் சக்தியைக் கூட்ட இந்த நாகத்தின் உப்பான ஜிங் சல்பேட் பயன் படுகிறது இதுபோல் இன்றைய விட்டமின் மாத்திரைகளில் சக்கரை நோயாளிகளுக்கான தாயரிப்பில் பயன் படுகிறது. இது இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது, சித்த ஆயுர்வேத சக்கரை நோய்க்கு உரிய மருந்துகளில் நாக பற்பம் சேர்க்கப்படுகிறது.
பொது குணம் – துவர்ப்பி Astringent குருதிப்போக்கடக்கி Haemostatic









உருக்கு :--
இதுவும் சித்த மருத்துவத்தில் பயன் படும் உலோகங்களில் ஒன்றாகும். இது இரும்பு தாதுவை குறிப்பிட்ட உஷ்ண நிலையில் பக்குவப் படுத்தி செய்யப் படுகிறது இது இரும்புக்கு உள்ள குணங்களே உள்ளது இது இரும்பை விட கடினாமானது ஆனால் இது கீழே விழுந்தால் உடைந்து விடும் பண்புடையது. இதில் சுன்னாம்புக் கல்லையும் சேர்த்து இந்த வார்ப்பு இரும்பை உஷ்ணப்படுத்தினால் குறிப்பிட்ட நிலையில் தேனிரும்பு என்னும் உலோகம் கிடைக்கிறது. இது எஃகு இரும்பான உருக்கை விட மென்மையானது. வளைந்து கொடுக்கும் தன்மையுள்ளது இவ் இரண்டு உலோகங்களும் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இந்த உருக்கிலும் சிலமாற்றங்கள் செய்யப்பட்டு உடையா தன்மையும் உள்ளவைகள் செய்து பயன் படுத்தப் படுகிறது. இது சித்த மருத்துவத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது.
தந்தமந்த மூலவுரு தாது நட்டம் சோபைகண்ணோய்
வந்தமந்தம் பாண்டுவினை வன்மை குன்றன் – முந்தப்
பெருக்கிடையாய் நீட்டுகப பேத மிவைகட்
உருக்கிடையா தோட்டு முரை
இதனால் பல் நோய், பல் சம்மந்தப் பட்ட பலவித நோய்கள், சுக்கிலம் குறைதல், உடலில் ஏற்படும் வீக்கம், கண் நோய்கள், உடல் வெளுப்பு, வலிமை குன்றல், சயநோய் அதனால் ஏற்படும் சோர்வு பலகீனம் நீங்கும்.
பொது குணம் –உடல் தேற்றி Alterative துவர்ப்பி Astringent உடல் உரமாக்கி
Tonic
வெண்கலம் :--
இது தனி உலோகம் அல்ல இரண்டு உலோகங்களின் கலப்பாகும் தாமிரத்துடன் வெள்ளீயத்தை கலந்து உருக்கி செய்வது எகிப்து நாட்டுச் சமாதிகளில் காணப்படும் வெண்கலச் சின்னங்கள் கி.மு. 3500 ஆண்டு  களைச் சேர்ந்தவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டு வெண்கலம் உறுதி மிக்க உலோகமாக இருந்து வந்தது. ஈட்டிகளும் கோடாலிகளும் கலசங்களும் செய்ப்பட்டு வந்தது. இது சித்த மருத்துவத்திலும் பயன் படுத்தப் படுகிறது. ஆனால் பெரும்பாலும் தங்கம், வெள்ளி, தாம்பிரம், இரும்பு, வெள்ளியம், காரீயம், நாகம் பயன் படும் அளவு மருத்துவர்கள் இதைப் பயன் படுத்துவது இல்லை. இது பற்றி சித்தர்களின் சொல்லைப் பார்ப்போம்.
வெங்கலத்தின் பெயர்தனையே கேளு
பார்க்கின்ற கண்ணாட்டி மணியுமாகும்
மிரளு கின்ற தோசமாம் கஞ்சமாகும்
பங்கலத்தின் ஓடையால் கலங்கிண்ணியாகும்

மங்கலத்தி மாருதமாம் பிரகாசமாகும்
வலிக்கஞ்சம் வாசகப் பீனிசமுமாகும்
செங்கலத்தின் செப்பு இரண்டு வெள்ளீயம் ஒன்று
சேர்த்திடவே வெங்கலத்தின் செயலுமாமே
                                :-- போகர் நிகண்டு
வேக்கியமே வெங்கலந்தான் னிரண்டுபேதம்
மிக்கது லோர் புசங்கமென்ற வெங்கலம்தான்
சவுராட்டி ரநாட்டில்தான் தோற்றமாச்சு
மிக்கியுமே ரசகர்மம் தனக்குத் தானும்
மிகுதியுமே உத்தம மென்றறிந்து கொள்ளே
                                :-- போகர் நிகண்டு
நேத்திர நோய் சொமவினை நீர் பெருக்கி ரத்தபித்தம்
வீழ்த்துசுவா சம்மந்த மேகமோ – டாழ்த்துகப
வாதவலி சூலை மகோதரம் போம் பித்தமொடு
தாதுவுமாம் வெண்கலத்தாற்றான்
                                :-- தேரையர்
இந்த உலோகம் போகர் சவுராஸ்டிர தேசத்தில் கிடைக்கும் என்றும் இதில் இரண்டு விதங்கள் உண்டு என்றும் சொல்கிறார். மற்றும் செம்பு ( தாமிரம் ) இரண்டு பங்கும் வெள்ளீயம் ஒரு பங்கும் கலந்து செய்யப்படுகிறது என்றும் கூறுகிறார். மற்றும் மிரளும் தோஷம், கஞ்சம், மங்கலோசை, கலங்கின்னி, கண்ணாட்டிமணி, மங்கலமாருதம் போன்ற பெயர்கள் இதற்கு உண்டு என்றும் சொல்கிறார். இந்த உலோகம் கண் நோய் வெள்ளை நோய், அதி நீர்ப்போக்கு, இரத்த பித்தம், இரைப்பு, அசீரணம், கபவாதம் பிரமேகம், குத்தல் பெருவயிறு இவைகளை குணப்படுத்தும். தாதுவாகிய சுக்கிலத்தையும் பித்தத்தையும் அதிகரிக்கச் செய்யும். இரத்தத்தில் உள்ள கிருமிகளை அளிக்கவும், குஷ்ட ரோகத்தை குணப்படுத்தவும் பயன் படுத்தலாம் ஆனால் வழக்கில் இதை மருந்தாக செய்து கொடுப்பது இல்லை.
பொது குணம்– உரமாக்கி tonic -- பித்த நீர் பெருக்கி cholagogue

தரா :-- 
இதுவும் ஒரு உலோகமாக சித்தமருத்துவத்தில் சொலப்படுகிறது.இது தாமிரத்துடன் + துத்தநாகம் கலந்து பித்தளை செய்யப்படுகிறது அவ்வாறான காலத்தில் கலக்கும் உலோகங்களின் கூடுதல் குறைதல் அல்லது வேறு சூழ்நிலை காரணமாக வெட்டையாகி விடும் அதை தரா என்று அழைக்கப்படுகிறது. இதுவும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டு இருந்தாலும் அதிகம் வழக்கில் மருத்துவர்கள் பயன் படுத்துவது இல்லை.
சூலையோடு மேகத்தை தோன்றம லோட்டிவிடு
மேலைவரு காலை விலக்குங்கா – ணால
வராமே வியவல்கு லாராணங்கே வெட்டைத்
தரா வெனும் லோகமது தான்
                     :-- தேரையர்
இந்த லோகமானது கீல்பிடிப்பு, வெள்ளைபடுதல் கபவாத தொந்தம், ஆகியவைகள் தீரும்.





காரியம் (அ) கருவங்கம் plumbam (or) blacklead

 இந்த உலோகம் சித்த மருத்துவத்தில் பயன் பாட்டில் உள்ள உலோகமாகும். இது இயற்கையில் கிடைக்கும் உலோகங்களில் ஒன்று. இது கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சின்னங்களில் உள்ளதில் இருந்து இதை மனிதன் நீண்டகாலமாக அறிந்து இருந்ததை அறியலாம்.இதன் தனிம மூலக எண் 82 ஆகும் கிராபைட் கண்டு பிடிப்பதற்கு முன் இக் காரியக் குச்சிகளே எழுதப் பயன் பட்டு வந்தது அதனால் தான் இன்று பென்சிலை லெட்பென்சில் என்று அழைக்கிறோம். இன்று நாம் பென்சிலில் கிராபைட்டை பயன் படுத்தினாலும் பழைய பெயரே வழங்கப்பட்டு வருகிறது. காரியம் தனி உலோகமாக கிடைப்பதை விட காரிய சல்பைடாக அதன் தாதுக்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. இதில் இருந்து ரெட் ஆக்சைடு அல்லது லெட் ஆக்சைட் செய்யப்படுகிறது. இது வர்ண வேலைகளில் பயன் படுகிறது இந்த ரெட் ஆக்சைடு சித்த மருத்துவத்தில் களிம்புகள் செய்யப் பயன் படுகிறது. காரியத்தின் செயல்
பன்மரனஞ் சக்கிநோய் பாகர்த் தபிவிரணங்
குன்மங்கால் சூலங் குதவிரணஞ் – சன்மப்
பெருநாக மேகப் பிணிசுரமி வற்றைக்
கருநாகமே நீக்குங்காண்
                           :-- தேரையர்
இது பலவித தாவர விஷங்கள், கண் நோய், கர்த்த பிரமேகம், வாத குன்மம், பவுந்திரம், கஜசர்மம், குஷ்டம், சுரம் இவைகளை நீக்கும். இதைச் செந்தூரம், பற்பமாக செய்து உபயோகிக்லாம்.
பொது குணம் – பசித்தூண்டி stomachic, அழுகலகற்றி anti- septic, உடற்தேற்றி alterative.

வெள்ளீயம் :--





இந்த உலோகம் மனிதனின் வாழ்வியலில் தங்கம், வெள்ளி, தாம்பிரம் போல் பயன்படுகிறது. இது பெரும் பகுதி தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மலேயாத் தீபகற்பத்தில் இருந்தும், தென் அமெரிக்காவின் பொலிவியாவிலிருந்தும், கிரேட் பிரிட்டனின் தென் மேற்கு மூலையில் உள்ள சிறு,சிறு தீவுகளில் இருந்தும் கிடைக்கிறது. ஸ்ட்டானிக் STANNIC என்னும் சொல் வெள்ளியத்தைக் குறிக்கும் ஸ்ட்டானம் STANNAM என்னும் லத்தீன் மொழியில் இருந்து தோன்றியது. இது வெண்கலம் செய்யப் பயன் படுகிறது. ஆனால் தற்காலாம் இதற்குப் பதில் அலுமினியம் சேர்க்கப்படுகிறது. வெள்ளீயத்தின் தனிம மூலக எண் 50 ஆகும். இது சித்த மருத்துவத்தில் பயன் படுகிறது.
தாகங் கரப்பான் சலமேகம் பித்தகப
மேக மொளிமங்கல் வெப்பபல – மாகிரந்தி
துள்ளியமந் தார சுவாசமும் மந்தாக்கினியும்
வெள்ளீயம் போக்கும் விதி
காசநோய்,தாகநோய் மது மேகம், கடுவன் சலப்பிரமேகம்,பித்த கப தொந்தம், உடல் ஒளி குன்றல் சுரம், உடல் பலகீனம், விரணம், மந்தாரகாசம், கபத்தினால் உண்டாகும் வயிற்றில் ஏற்படும் மந்த நிலை தீரும்.
பொது குணம் --- உரமாக்கி  Tonic , துவர்ப்பி Astringent - உடற்தேற்றி Alterative







இரும்பு ( IRON ) :---

 நாம் ஏற்கனவே எஃகை பற்றிப் பார்த்து விட்டோம் அதன் உடன் பிறப்பான தேனிரும்பைப் பற்றி நாம் பார்ப்போம். இது கி.மு.3500 ஐச் சேர்ந்தவை ஆனால் அப்போது இரும்பு அதிகமாக பயன் படுத்தவில்லை. அது போல் கி.மு. 1500 வருடங்களுக்கு முன்வரை இரும்பு அதன் தாதுவில் இருந்து பிரித்து எடுக்கும் முறையை மக்கள் அறியவில்லை. பூமி பரப்பில் அதிகமாகக் காணப்படும் உலோகங்களில் இரும்பு இரண்டாவது இடத்தை வகிக்கிறது. விண்வெளியில் இருந்து இரும்புத்தாது எண்ணற்ற துகள்கள் பூமியை வந்தடைகிறது. எண்ணற்ற துகள்கள் சூரியனை இடைவிடாது சுற்றிக் கொண்டு இருக்கின்றன. இவற்றுள் நாள் தோறும் பூமியின் வாயு மண்டலத்தை தாக்கும் துகள்கள் எண்ணற்றவை அதில் உராய்வில் எறிந்தது போக பூமிப் பரப்பை அடைவது நிறைய உள்ளன. இந்த கற்களில் 90% இரும்புத்தாது உள்ளது. எஞ்சியவை சிலிக்கேட்டாகும். இரும்பு மனித உடலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனித உடலில் 1/10 அவுன்ஸ் இரும்பு இருக்கிறது. உயிரினங்களுக்கு மிக இன்றியமையாத மூலகம். இது சிவப்பு இரத்தம் உள்ள பிராணிகளின் இரத்தத்திற்கு நிறத்தை தரும் நிறமியான ஹீமோகுளோபின் நுரையீரலில் ஆக்சிஜனை ஏற்றுக் கொண்டு எல்லா திசுக்களுக்கும் கொண்டு செல்கிறது. ஒவ்வொரு ஹீமோகுளோபின் மூலக்கூறும் நான்கு இரும்பு அணுக்களை கொண்டது. இதன் பனி நம் உடல்இயக்கத்திற்கு மிக முக்கியமானது.
           சித்த மருத்துவத்தில் இரும்பு சத்து அடங்கிய மூலிகைகள், மற்றும் நேரடியான இரும்பைக் கொண்டு செய்யும் செந்தூரம், பற்பம் போன்ற மருந்துகளால் மனித உடல் தேவைக்கு தக்கவாறு கொடுக்கப் படுகிறது. இதை சித்தர்கள் கருந்தாது என்கின்றனர்.
பாண்டு வெண் குட்டம் பருந்தூல நோய் சோகை
மாண்டிடச் செய் மந்தங்கா மாலை குன்மம் – பூண்டே
பெருந்தாது நட்டமும் போம் பேதி பசி யுண்டாங்
கருந்தாது நட்டமிடுங்கால்
குணம் -- 
பித்தபாண்டு, வெண்குட்டம், உடல் பருமன், காமாலை, வயிற்றுவலி, சுக்கில நட்டம் ஆகியவை நீங்கும். பசியும் மலப்போக்கும் உண்டாகும்.
பொதுக்குணம் --- உரமாக்கி TONIC பசித்தூண்டி STOMACHIC துவர்ப்பி ASTRIGENT உடற்தேற்றி ALTERATIVE

பித்தளை:--- இது வரை சித்தர்களின் நூல்களில் சொல்லப்பட்டு உள்ள உலோகங்களை தெரிந்து கொண்டோம். கடைசியாக பித்தளை என்ற உலோகத்தைப் பார்ப்போம். இது தாமிரமும் வெள்ளீயமும் கலந்த உலோகம் என்பது பற்றி முன் உலோகங்களின் கருத்துக் கூறல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுவும் மனிதன் நீண்டகாலமாக அறிந்த உலோகங்களில் ஒன்று.
தாதுவிர்த்தி யுண்டாகும் தாபசுரம் போகும்
சீதளமாம் வாதம் சிதையுங்க்கான் – பூதலத்துள்
மாட்டியதோர் பித்தகுன்மம் ஆறுமலர்த் திருவே
நாட்டியதோர் பித்தளையினால்
                                :-- தேரையர்
குணம் – இதனால் சுக்கிலப் பெருக்கமும், குளிர்ச்சியும், பித்தச் சுரமும், வாதாதிக்கமும், பித்த குன்மாமும் தீரும்.
பொது குணம் – உரமாக்கி TONIC காமம்பெருக்கி APHRODISIAC தாதுவெப்பற்றி sedative
இதுவரை கண்கள் மூன்றில் சுத்தியை அடுத்து தாது வர்கத்தில் உலோகத்தை பார்த்தோம். இனி அடுத்து காரசாரம் பற்றிப் பார்ப்போம்.
************************************************************************************************************
                                        



Comments

  1. அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்,சித்தர் அருள் கிடைக்கும்

    ReplyDelete
  2. தங்களின் பதிவுகள் மிக அருமை ஐயா.தங்கள் பணி சிறக்க இறைவன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அருள வேண்டும்.AVM.பூபதி வைத்தியர்.குனியமுத்தூர்.

    ReplyDelete
  3. நன்றி அய்யா இடையில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக தொடர்பு கொள்ள இயலவில்லை இனி தொடர்வோம் பணியினை

    ReplyDelete
  4. காந்தம் பிடிக்காத அயன செந்தூரம் எப்படி செய்ய வேண்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மருந்து சுத்தி --- 2

கண்கள் மூன்று 1