கண்கள் மூன்று 1

சித்த மருத்துவத்தின் கண்கள் மூன்று

சித்தர்களின் பெயரால் சித்தமருத்துவம் என்று வழங்கப்படுகிறது. இது முற்றிலும் சரியானதுதான ? எதன் அடிப்படையில் சித்தமருத்துவம் செயல் படுகிறது ? என்ற வினாக்களை தொடுத்தால் அது ஒரு முறையான வழித்தடத்தை பின் பற்றி வந்துள்ளது என்றால் அது மிகையல்ல. ஆனால் நமது நாட்டை முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்த போது, அவர்களுது மருத்துவம் நம் நாட்டில் நுழைந்தவுடன் நமது சித்தமருத்துவம் ஆதரவின்றி குன்றத் தொடங்கியது. நமது தமிழ் நாட்டில் மட்டுமே தமிழைத் துணையாகக் கொண்டு செயல் பட்டதாலும் ஏற்கனவே ஆரியக்கலப்பினால் ஆயுர்வேதத்திற்கு இருந்த ஒத்துழைப்பு மற்றும் அன்றைய ஆட்சியாளர்களுக்கு மேல் மட்டத்தில் இருந்தவர்கள் ஆயுர்வேதத்தை மிகைப்படுத்தியும் ( இது பற்றி எனது பாரம்பரிய சித்தமருத்துவ  தொகுப்பில் பார்க்கவும்.) ஒதுக்கியும் செயல்பட்டதாலும் அதன் வளமும், விரிவாக்கமும் தடைப்பட்டு நின்றுவிட்டது. ஆதியில் மாந்தனின் முதற்கட்ட மருந்துகளாக தாவரவர்க்கத்தை தான் பயன்படுத்தி வந்தான். அவனது அனுபவங்களின் தொடர்பாக வளர்ச்சியடைந்த காலத்தே மருத்துவ ஆசிரியர்கள் தங்கள் சீடர்களுக்கு பலவிதி முறைகளை வகுத்து அதனை அவர்களுக்கு பயிலுவித்து வந்தனர். அதன்படி சித்தமருத்துவ மாணவனுக்கு பாடல்கள் வழியாக வெளிப்படுத்தினர். அக்காலத்தில் எழுதி  வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் அதிகம் இல்லாத காரணத்தால், ஆதியில் வேதம் முதல் சங்ககாலப் பாடல்கள் யாவும் மனதில் இருத்திக் கொண்டு தேவைப்படும் காலத்தில் வெளிப்படுத்த பாடல் வடிவங்களே துணையாக இருந்தன. அதன் பின்பு அவை ஓலைச்சுவடிகளின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு மாந்தனின் கருத்துக்கள் ஓலைச் சுவடிகளில் எழுத ஆரம்பித்தார்கள். சீடர்களுக்கும் அது எளிய வகையாக பயன்பட்டது. சித்தர்கள் காலமான கிபி இரண்டாயிரம் வருடங்களுக்கு உட்பட்ட காலங்களில் ஓலைச் சுவடிகள் பயன் பாட்டில் இருந்தமையால் அவர்களது கருத்துக்கள் ஓலைச் சுவடிகளில் அச்சு இயந்திரங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இந்தியாவில் பயன் பாட்டிற்கு வரும் வரை பயன்பாட்டில் இருந்தது. இதில் அகத்தியர் வைத்திய சாகரம்- 41என்னும் பாடல் தொகுப்பில் இருந்து துவங்குவோம். சித்த மருத்துவ நூல்களில் அகத்தியர் சித்த மருத்துவத்திற்கு ஒரு முக்கியமான வழித்தோன்றலாக கருதப்படுகிறார். ஆனால் வராலாற்று ஆய்வுகளில் இவர்குறித்து பலவித விவாதங்கள் உள்ளது. அவற்றையும் கருத்தில் கொள்வது அவசியம் என்று கருதுகிறேன். இது சித்தமருத்துவ தொன்மை பற்றி அறிய உதவும். இவர் பற்றிய சிலரின் ஆய்வுகளைப் பார்ப்போம்.
அகத்தியம் :-
          ( ஆய்வு – முனைவர் சிலம்பு ந. செல்வராசு அவர்களின் நூலில் இருந்து ) முதன் நூல் பற்றிய இலக்கணம் தொல்காப்பியத்தில் அமைந்து கிடந்தாலும் தொல்காப்பியத்தின் முதல் நூல் எது என்பது பற்றிய தெளிவுகள் தொல்காப்பிய உள்ளடக்கத்தில் தெளிவு பெறவில்லை. முதன் நூல் பற்றிக் குறிக்கப்பட வேண்டிய பாயிரத்துள்ளும் முதன் நூல் இது தான் எனத் தெளிவுபடக் குறிப்புகள் இல்லை. தவிர முதன் நூல் என மயக்கம் தரத்தக்கவகையில் ஐந்திரம் சர்ச்சைக் குறியதாய் அமைவு பெற்றுள்ளது இளம்பூரணர் தவிர ஏனைய உரையாசிரியர் பலரும் ( நச்சினார்க்கினியர், பேராசிரியர், சிவஞ்ஞான முனிவர், அரசஞ்சன்முகனார் ) தொல்காப்பியத்தின் முதன் நூல் அகத்தியமே என்று உறுதிப்பட மொழிந்து உள்ளனர்.
(1)  தொல்காப்பிய உரையாசிரியர் வெவ்வேறு இடங்களில் அகத்தியரைச் சுட்டியுள்ளார்கள். இளம்பூரணார் தமிழ் கூறும் நல்லுலகம் எனும் பாயிரத் தொடருக்கு நல்லுலகத்து என்றது அவ்வெல்லை தமிழ் கூறும் நல்லாசிரியரது என்ற வாறு நல்லாசிரியர் அகத்தியனார் முதலாயினார் என்று விளக்கம் தந்துள்ளார்.
(2) ஆதியில் தமிழ் நூல் அகத்தியர்க்குனர்த்திய மாதொருபாகனை வழுத்தும் எனவும் அகத்தியனால் தமிழ் உரைக்கப்பட்டது, எனவும் சேனாவரையர் சொல்லதிகார உரையில் குறித்துள்ளார். இதன் வழி அகத்தியம் முதநூல் என்பது வலியுறுத்தப்பட்டது.
(3)  தொல்காப்பியத்தின் முதன் நூல் அகத்தியமே என வலியுறுத்திக் கூறியவர் உரையாசிரியர் பேராசிரியர் ஆவார். வினையின் நீங்கிய எனும் முதனூல் பற்றிய தொல்காப்பிய நூற்பாவுக்கு உரை வரைந்த பேராசிரியர் ஈண்டுச் கூறியது என்னையோ எனின் தாமே தலைவராவாரும் அத்தலைவரை வழிபாட்டுத் தலைவராயினார் பலராகலின் தாமே தலையராயினார் நூல் செய்யின் முதநூலாவது எனின் அற்றன்று, தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ் நூல் செய்திலராகலின் தலைவர் வழிநின்று தலைவனாகிய அகத்தியனார் செய்யப்பட்டதும் முதனூல் என்பது அறிவித்தற்கும் அங்கனம் வினைவின் நீங்கிய விளங்கிய அறிவினான் முதனூல் செய்தான் என்பது அறிவித்தற்கும் இது கூறினான் என்பது. எனவே அகத்தியமே முற்காலத்து முதனூல் என்பதும் அதன் வழித்தாகிய தொல்காப்பியம் வழிநூல் என்பதும் பெற்றாம். என்று விளக்கம் அளித்துள்ளார்.
(4)பல்காப்பியப் புறநடைச் சூத்திரமும் பன்னிருபடலப் பாயிரமும் புறப்பொருள் வென்பாமாலைச் சிறப்புப் பாயிரமும், நம்பியகப் பொருள் பாயிரமும், தண்டியலங்காரமும் தொல்காப்பியத்தின் முதனூல் அகத்தியமே என்பதை விரிவுபட விளக்கியுள்ளன.
     இதுகாறும் கூறப் பெற்ற செயிதிகளே பிற்காலத் திறனாய்வாளர்கள் தொல்காப்பியத்தின் மூலநூல் அகத்தியம் என வலியுறுத்திக் கூறுவதற்குச் சான்றுகலாயின. ஆயின் இச் செயிதிகளை கூர்ந்து நோக்கும்போது அகத்தியம் குறித்த கருத்து உருவாக்க நிலையில் ஒரு பரிணாம வளர்ச்சி நிகழ்ந்திருப்பதை உணரமுடியும். இளம்பூரணார் தொடங்கி பேராசிரியர் வரை இக் கருத்து வளர்ச்சியின் படி நிலையைக் காண முடிகிறது. இளம்பூரணார் முந்து நூல் என்பதற்கு முதல் நூல் எனப் பொது நிலையில் தாம் பொருள் கண்டனர். அகத்தியர் அகத்தியம் பற்றி அறிந்திருந்த இளம்பூரணார், நச்சினார்க்கினியர் போல முந்து நூல் அகத்தியம் எனக் குறிப்பிடாதது எளிய செயலாக ஒதுக்கி விடுவதற்கு இல்லை. தமிழ் கூறு நல்லுலகம் என்னும் பாயிரத்தொடர் விளக்கத்தில் அகத்தியனாரைக் குறிப்பிட்ட இளம்பூரணார் அடுத்தடுத்த தொடராகிய முந்து நூல் என்பதற்கு அகத்தியத்தைக் குரிப்பிடாததும் அவ்வாறு குறிப்பிடத் தடுத்ததுமாகிய சிந்தனைகள் ஆழக் கவனத்திற்குரியன. இழப்போஊரனார் தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியர் என்ற நிலையில் அவர் காலத்து இலக்கண வரலாற்றுச் சிந்தனை தொல்காப்பியத்தின் முதன் நூலாக அகத்தியத்தை ஏற்கவில்லையோ என்ற ஐயம் தோன்றுகிறது. முதனூல் பற்றிய சிந்தனைப் போக்குகளின் வளர் நிலையில் அமைவது பேராசிரியரின் உரையாகும். அகத்தியமே முற்காலத்து முதனூல் என்பது அதன் வழித்தாகிய தொல்காப்பியம் வழிநூல் என்பதும் பெற்றாம் என்று உரைவரிகள் மறை முகமாகத் தொல்காப்பிய முதனூல் எது என்பது பற்றிய கடுமையான விவாதத்தை உள்ளடக்கியது. இலக்கண வரலாற்றைப் பதிவு செய்துள்ளதை அறிய முடிகிறது. விவாதத்தின் மையமாக அகத்தியமே முதனூல் என்பதும் அகத்தியம் முதல்நூல் அன்று என்பதும் அமைந்தமையையும் அறியமுடிகிறது. இவ்விவாதத்தின் நடுவராக பேராசிரியர் நின்று முடிவுரைக்கும் நிலையையே மேல் உரைவரிகள் தெரிவிக்கின்றன. எனவே பேராசிரியர் காலத்திலேயே முதனூல் பற்றிய சர்ச்சைகள் எழுந்துவிட்டன என்பது தெளிவாகிறது. உரையாசிரியர்களைத் தொடர்ந்து பிற்காலத்து திறனாய்வாளர் பலரும் அகத்தியத்தை தொல்காப்பியத்தின் முதனூல் என்றே குறித்தனர்.
        சிவகுருசபாபதி நாவலர் தமது திராவிடப் பிரகாசிகை என்னும் நூலில் தொல்காப்பியத்தின் முதனூல் அகத்தியமே என்று சுட்டியுள்ளார் மேலும் அகத்தியர் தமிழ் மொழிக்கு இலக்கணங் செய்தமைக்கு காரணமும் சுட்டுகின்றார். தமிழ் மொழியின் செம்மை முற்பொழுதில் வலுவிரவி இழுக்க முற்றது. அகத்தியம் என்னும் நூல் அதனை வழுவின் நீக்கிச் செம்மை உறுவித்து நெறிப்படுத்தியதுஎன்று குறிப்பிடுகின்றார்.(ப.தங்கராசன் 1938) தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் அகத்தியர் சிவபெருமானிடமும், முருகனிடமும் தமிழ் இலக்கணம் கற்றனர்  என்று நம் தொன்நூல்கள் ஒருமித்தே கூறுவதால் அகத்தியம் என்னும் நூலை அகத்தியர் இயற்றியே இருக்க வேண்டும் என்றும் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் உள்ள இலக்கணம் என்றும் குறிப்பிடுகிறார். மூ.இராகவையங்கார் (1938) , கே.எஸ்.சீனிவாசன் பிள்ளை (1937) ஆகியோர் தமது நூல்களில் அகத்தியர் வரலாற்றை உடன்பட்டு அகத்தியமே தொல்காப்பியத்தின் முதனூல் என்று கூறியுள்ளனர் ( ப.தங்கராசன் (1978).
 தொல்காப்பியத்தின் முதனூல் அகத்தியம் என்று ஒரு சாரார் வலியுறுத்திக் கூற அகத்தியம் அன்று எனப் பிறிதொரு சாரார் சான்று களைத் தந்துள்ளமையும் ஈண்டுக் கவனத்திற்குரிய ஒன்றாகும்.இரா,இராகவையங்கார் தமது தமிழ் வரலாறு என்னும் நூலில் அகத்தியர்க்கும் தொல்காப்பியர்க்கும் தொடர்பில்லை என்பதை நிறுவியுள்ளார் (இரா.இளங்குமாரன் 1990 )
(1) பரிபாடலில் வரும் பொதியன் முனிவன் என்பதற்கு அதன் பழைய உரை ஆசிரியர் பரிமேலழகர் அகத்தியன் என்னும் மீன் என உரைவரைந்துள்ளார் (11:11) அதனை மூல நூலாட்சி எனக் கொள்ளல் ஏலாது.
(2) அமரமுனிவன் அகத்தியன் என மணிமேகலையிலே தான் அகத்தியன் என்னும் பெயராட்சி தமிழ் இலக்கண இலக்கிய பரப்பில் முதன் முதலாக கேட்கப்படுவதாகும்.
(3) இதற்கு மறுதலையாக வடமொழி நூல்களில் அகத்தியன் என்னும் பெயராட்சி உண்மை விளங்குகின்றது. அகத்தியர் வடமொழி ஆதிகாவியம் வான்மீகத்தில் ( இராமாயணம் ) அகத்தியர் சுட்டப்படுகிறார். அவ்வாறு அகத்தியரைச் சுட்டும் இடத்து அவர் தமிழ் வல்லார் என்றோ இலக்கணம் செய்தார் என்றோ குறிப்பு இல்லை.
(4) அகத்தியரை அமரமுனிவன் என்பது முதலாகக் கூறுவது எல்லாம் இதிகாச புராணங்களில் கேட்கப்படும் அகத்தியர் வரலாற்றை நெடுங்காலம் பிந்தியவரகிய இவர்க்கு ஏற்றி வழங்கினவாக நினைப்பது பொருந்தும். ஒன்றோடு ஒன்று ஒவ்வாக் கால வேற்றுமையில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளையும் பொதியன் முனிவர்க்கு ஏற்றிக் கூறுதல் சிறிதும் பொருந்தாமை காண்க.
(5) முதன் முதல் வடநாட்டினின்று தென்னாடு புக்க அகத்தியர் வடபால் விந்தியத்தை அடுத்தும் தென்பால் மகேந்திரத்தை அடுத்தும் வதிதல் கூறிய வான்மீகத்தில் அவரைத் தமிழறிவு உடையவராகக் கூறாமை கவனிக்கத் தக்கது. அனுமனுக்குத் தென்னாட்டு மொழியுணர்ச்சியும் வடமொழியுனர்சியும் உடன்பட்டுக் கூறும் வான்மீகி அகத்தியரைச் சிறிதும் தென்மொழி உணர்ந்தவராக புகலாமை பெரிதும் வியப்பைத் தருவதாகும். அவர் தமிழ் நாட்டரசரையும் அவருள் பாண்டியன் தலைநகரையும் கூறுதல் காண்க.
(6) வியாச பாரத நூலுள்ளும் அகத்தியரைத் தமிழரிந்தவராக கூறாமை நோக்கிக் கொள்க. மறைமலையடிகள் தமது மாணிக்கவாசகர் வரலாறும், காலமும் என்னும் நூலில் அகத்தியத்திர்க்கும் தொல்காப்பியத்திற்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராய்ந்து உள்ளார். அவரது ஆய்வு முடிவுகள் வருமாறு (ப.தங்கராசன் 1978)
      கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்வந்த நூல்களிலும், உரைகளிலும், புராணங்களிலும் மட்டுமே அகத்தியர் தொல்காப்பியர் தொடர்பு பற்றிய கதைகள் காணப்படுகின்றன. இறையனார் அகப்பொருள் உரைப் பாயிரத்தில் அகத்தியர் பற்றி வந்த குறிப்புகள் நக்கிரரால் உரைத்தன அல்ல, புராணக்கதைகள் மிக்கெழுந்த பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். புறப்பொருள் வென்பாமாலைப் பாயிரத்தில் அகத்தியனார் தொல்காப்பியனார் பற்றிய குறிப்புகள் கானப்படுவதர்க்குக் காரணம் இந்நூல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதன்று. பன்னிருபடலம் என்னும் புறத்திணை நூல் ஆசிரியர் தொல்காப்பியர் உள்ளிட்ட அகத்தியர் மாணாக்கர் பன்னிருவரால் இயற்றப்பட்டது உண்மையானால் அதன்கண் கூறப்பட்ட புறத்திணை இலக்கணம் தொல்காப்பியத்தின்கன் கூறப்பட்ட புறத்திணை இலக்கணத்தோடு பெரிதும் ஒத்திருக்க வேண்டும். ஆனால் அங்கனம் ஒத்துவரவில்லை என்பதே உண்மை. எனவே வெட்சிப் படலம் தொல்காப்பியனார் செய்ததன்று என்பதும் அதன்கன்னுள்ள ஏனைய படலங்களும் அகத்தியர் மானக்கரால் செய்யப்பட்டன அல்ல என்பதும் நான்கு விளங்கும். பன்னிருபடலம் அகத்தியர் மாணாக்கர் பன்னிருவரும் சேர்ந்து செய்தது என்பது வெறுங்கட்டுக் கதையே என்று மறைமலையடிகள் கூறியுள்ளார்.
       வெள்ளை வாரனார் தமது  தொல்காப்பிய வரலாற்றில் அகத்தியனார் பற்றிய கதைகளின் ஒருபகுதி உண்மையாக இருக்கலாம் என ஒப்புக்கொண்டு அகத்தியர்க்கும் தொல்காப்பியர்க்கும் உள்ள தொடர்பினைத் துணிதற்கு ஏற்ற சான்று எதுவும் நூலிலோ பாயிரத்திலோ இல்லை என்றும் பின்னுள்ளோரால் காட்டப்பெறும் அகத்தியர் சூத்திரங்கள் தொல்காப்பியர் காலத்திற்கு மிகமிக பிற்காலத்தே இயற்றியதாக இருக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார் (ப. தங்கராசன் 1978)
          ‘’அகத்தியத்தின்” இலக்கணக் கோட்பாடுஎன்ன? அவ்விலக்கணம் கையாண்ட கலைச்சொற்கள் அடங்கிய கருவிமொழி(meta language) எது ? இயலமைப்பு முறை என்ன ? அக்காலத்தில் பெரு வழக்கில் இருந்த இலக்கணச் சிந்தனைகளுள் எந்தப் பள்ளியைச் சார்ந்தது. அகத்தியம் என்பன போன்ற வினாக்களுக்கு விடை கிடைக்கும் வரையில் அகத்திய தொல்காப்பியத் தொடர்பை அறிவியல் பூர்வமாக நிறுவ இயலாது “ எனக் கூறிய அவர், அகச்சான்று இல்லாத நிலையிலும் வழிநூல் எனப்படும் தொல்கப்பியத்தோடு ஒப்பிட்டு நோக்கும் வரையில் அகத்தியம் நூல் வடிவில் கிடைக்காத நிலையிலும் அறிவியல் நோக்கில் அகத்தியம் என்றொரு இலக்கணம் இருந்ததாகவோ அது முதனூலாக விளங்கியதாகவோ ஏற்றுக் கொள்ள இயலாது எனவும் தமிழிலக்கணக் கோட்பாட்டை அறிவியல் அணுகு முறையோடு ஆராய முற்படும்போது அகத்தியம் என்னும் இலக்கண நூலோடு தொல்காப்பியத்திற்குள்ள தொடர்பை நிலைநாட்ட இயலாது என்பதே உண்மையாகும் எனவும் முடிவுரைத்துள்ளார்.இது வரை இலக்கியச் சான்றுகளின் வழியாகப் அகத்தியர் பற்றிப் பார்த்தோம் 
  இனி அகத்தியர் பற்றிய நா கந்தையா பிள்ளையின் அகத்தியர் பற்றிய ஆய்வு நூலைத் தருகிறேன் --- 





















































     இதனைக் கருத்தில் கொண்டு சித்த மருத்துவ நூல்கள் எழுதிய அகத்தியர் பற்றி பின் பார்ப்போம். இப்போது சித்தமருத்துவத்தின் அடிப்படையையும், அதன் செயல் முறைகளையும் அகத்தியரின் நூல்களிலும், யூகிமுனிவரின் நூல்களின் வாயிலாகவும் பார்ப்போம். இடையே மற்ற சித்தர்களின் கருத்துக்களையும் பார்ப்போம்.

         ஆயுர்வேத நூல்களான சரகம், சாரங்கதாரம், அஷ்ட்டாங்க கிருதயம் போன்று கோர்வையான நூல்கள் இல்லை அகத்தியர் குணவாகடம், தாதுவர்க்கம், தாவரவர்க்கம் யூகி சிந்தாமணி நாடி சாஸ்த்திரங்கள் என்று பல் வேராகவும் இதில் யோகம் தத்துவம் இரசவாதம் போன்ற செய்திகள் கலந்தும் உள்ளதால் புதியவர்களுக்கு ஒரு குழப்பத்தை தரக்கூடியதாகவும் உள்ளது, ஆகவே நாம் தேவையான இடங்களுக்கு தக்கவாறு சித்தர்களின் பாடல்களையும் ஆதாரங்களையும் எடுத்துக் கொள்வோம். இதில் யூகி சிந்தாமணி நோய் மற்றும் அதற்கான மருத்துவம் பற்றிக் கூறுவதில் சிறந்த நூலாக கருதலாம். இனி சித்த மருத்துவத்தின் செயல் பற்றிப் பார்ப்போம்.
வாதுகுறி வைத்தியரே சொல்லக் கேளீர்
வாகாகக் கண் மூன்று தலை நான்கு
நீதமுடன் முகங்களைந்து கைகளாறு
நிலைசரீரங்கள் எட்டு கால்கள் பத்து
வீதமிதன் பயனரிந்தார் வியாதி தீர்ப்பார்
விதமறியார் மானிடரைப் பழியே செய்வார்
சேதமாஞ் செய்மருந்து பலித்திடாது
செத்தபின்பு தீ நரகிற் சேருவாரே
                           :-- அகத்தியர் வைத்திய சாகரம் –41
அதாவது இந்த மருத்துவம் 36 தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. அதன் வழியாகச் செயல் படுகிறது.
கண்கள் -------    3
தலைகள் ------  4
முகங்கள் ------  5
கைகள் ----------  6
சரீரங்கள் -------   8
கால்கள் ---------- 10
என்று முப்பத்தியாறு தத்துவங்களின் அடிப்படையில் கீழ் கண்டவாறு செயல் படுவதை பார்ப்போம்.
மருந்து சுத்தி குணம் நிகண்டு கண்கள் மூன்று
வாதபித்த சிலேத்தும தொந்தங் தலைகள் நான்கு
அருந்துமறு சுவையறிதல் கைகள் ஆறாம்
அட்டவிதக் குறியறிதல் சரீரம் எட்டாம்
இருந்த தசநாடி தசவய்வு இரண்டும்
இதமாகப் பார்த்திடினிர் கால்கள் பத்தாம்
பொருந்தியதோர் பிண்ட நிலை முகங்களைந்தாம்
பொதியமலை அகத்தியனார் புகன்ற வாறே
                                :-- அகத்தியர் வைத்திய சாகரம் –41
                சித்தமருத்துவம் தெரிந்து கொள்ள விரும்புவோர் மேற்கண்ட பாடலில் கூறிய அடிப்படை விதிகளை அறிந்து கொள்ளவேண்டும். இதுவே முதல் நிலை கண்கள் மூன்று என்று குறிப்பிட்டுள்ளனர். நம் உடலுக்கு ஐம்பொறிகள் முதன்மையானது. அதிலும் கண் மிக முக்கியமானது. அதுபோல் மருத்துவனுக்கு மருந்துகளான மூலிகைகள், கடைச்சரக்குகளான பாடனங்கள், உலோகங்கள், காரவகைகள், சாரவகைகள், சுக்கு, மிளகு போன்ற மருந்து வகைகள் பற்றி அறிந்து கொள்வதுடன் அவற்றின் நல்ல செயல்கள், தீச்செயல்கள் அவற்றின் சுத்தி முறைகள் அவற்றின் பெயர்கள் என்று இம் மூன்றையும் தெளிவாக அறிந்து இருக்க வேண்டும். எப்படி யோக நிலைக்கு இயம நியம விதிகள் முக்கியமோ அது போல் மேற்கண்ட மருந்துகளின் சுத்தி, குணம், பெயர்கள் இவை முக்கியமானது. இதை அறிந்த பின் அடுத்த நிலையான நாடிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று

           என்ற வள்ளுவர் வாக்கிற்கு இணங்க நோயாளியின் நோய் பற்றி அறிதல் அடுத்த கட்டமாகும். அவை வாதம் – பித்தம் – கபம் – தொந்தம் என்று நான்கு வகைப்படும். அடுத்து பிண்ட நிலை முகங்கள் ஐந்து எனப்படும். நமது உடல் மற்றும் உலகனைத்தும் மண் – நீர் – காற்று – நெருப்பு – ஆகாயம் என்ற ஐந்து பூதங்களின் சேர்க்கையால் உண்டானது என்று கூறப்படும். அடுத்து கைகள் ஆறு என்று கூறியுள்ளனர். அவை நாம் வாயின் மூலமாக சுவையைக் கொண்டு அறிவது. இனிப்பு – காரம் – புளிப்பு – துவர்ப்பு – உவர்ப்பு –கைப்பு என்று ஆறுவிதமான சுவைகள் தாவரங்களிலும் மற்ற மருத்துவ சரக்குகளிலும் உள்ளன. இதனைக் கொண்டு வாத, பித்த கபக் காரணங்களை தெரிந்து கொள்வது. அடுத்து அட்டவிதக் குறியறிதல் சரீரம் எட்டாகும். அது நம் உடலுக்கு வரும் நோய்கள் பற்றி அறிந்து கொள்ளும் வழியாகும். கண் நிறம் உடல் உஷ்ணநிலை, கை நாடிபார்த்தல், நாக்கின் சுவை பார்த்தல், சிறுநீரின் நிறம், மனம், பார்த்தல் மலத்தின் தன்மை பார்த்தல் நோயாளியின் குரல் ஒலி, தொடு உணர்வு என்று எட்டு விதமான செயல்களைக் கொண்டு நோய் அறிதல். அடுத்து தசவாயு, தசநாடி என்று கூறப்படுவதை அறிந்து கொள்ளுதல் கால்கள் பத்தாகும். இவையே சித்த மருத்துவத்தின் அடிப்படையாகும் இனி இது பற்றித் தனித்தனியாகப் பார்ப்போம். 

Comments

  1. தங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன்,எனது எண்-9865909626.
    தயவு செய்து அழைக்கவும்.

    ReplyDelete
  2. தங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன்,எனது எண்-9865909626.
    தயவு செய்து அழைக்கவும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாது வர்க்கம் - 3

மருந்து சுத்தி --- 2